Tuesday 8 November 2011

சீனி என்றால் இந்து மதம்... sweeten என்றால் கிறிஸ்துவ மதம்...?




                 நவம்பர் 9, 2002  அன்று என்னை தண்ணீரில்  மூழ்கச் செய்து நீ மறு பிறவி எடுத்தாய் என்று சொன்னார்கள். அதற்கு பெயர் ஞானஸ்தானம்.  இன்று முதல் உன்னுடைய பெயர்  ஜோன்ஸ் என்று மாற்றப்பட்டுள்ளது என்று சொன்னார் எனது போதகர். ஏன் என்றால் சீனி என்றால் இந்து பெயராம். ஆதலால்  கிறிஸ்துவுக்குள் பிறந்ததன் அடையாளமாய் ஜோன்ஸ் என்று மாற்றப்பட்டுள்ளது என்று சொன்னார் அவர். அறியாத பருவத்தில் தெரியாமல், கிறிஸ்துவ மதத்தில் வாழ்ந்த களம் அது.
 
                  எல்லாம் வேடிக்கை. பிறப்பில் நான் ஒரு இந்து மதத்தைச் சார்ந்தவன். எனக்கு  பத்து வயது இருக்கும் போது கிறிஸ்துவ நட்பு வட்டரங்கள் கிடைத்தது. அவர்கள் என்னை கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்துவ மதத்திற்குள் இழுத்து எனக்கு கிறிஸ்துவ மதத்திற்குரிய அடையாளத்தை கொடுத்து விட்டார்கள். அதன் விளைவு தான். ஞானஸ்தானம், பெயர் மாற்றம் ஜோன்ஸ்.

          என்னை நிறைய கதைகளை சொல்லி மாற்றி விட்டார்கள்.  அப்போது எனக்கு விவரம் தெரியவில்லை. தெரிதிருந்தால் கேட்டுருப்பேன் என் போதகரிடம், ஏன் கிறிஸ்தவர்களின் மத்தியில் எனக்கு பெயர் மாற்றம், இன்னொரு பெயர் எதற்கு என்று?  எனக்கு ஞானஸ்தானம் கொடுத்து பெயர் வைத்த போதகரின் மகனின் பெயர் sweeten.  சீனி என்ற பெயரும் sweeten  என்ற பெயரும் ஒரே அர்த்தத்தைத்தான் தருகின்றது. ஆனால் சீனி என்றால் இந்து மதத்தின் பெயர், sweeten என்றால் கிறித்துவ மதத்தின்  பெயராம். நான் இதை அந்த போதகரிடம் கேட்டால் அவர் என்ன சொல்லியிருப்பார்...?

        கிறித்துவ மதம் என்றால் என்ன..? சற்று ஆழ்ந்து யோசித்தால் தெரியும். இயேசுவின் சீடர் தாமஸ் தொடங்கி  வெள்ளைக்காரன் நம்மிடம் பரப்பிச் சென்ற அவனுடைய மதம் கிறித்துவ மதம். அவனுடைய கலாச்சாரம் கிறித்துவ மதம். அவர்களுடைய வாழ்க்கைமுறை கிறித்துவ மதத்தை பின்பற்றியது. அதனால் அவன் அடிமை படுத்திய மக்களிடம் கிறித்துவ மதத்தை பரப்பினான்.  ஆதிக்கவர்கத்தின் கலாச்சார திணிப்பு கிறித்துவ மதம். வெள்ளைக்காரன் நம்மை ஆண்டவன். அவனுடைய கலாச்சாரத்திற்கு ஏற்ற பெயர்களை வைத்தால், அதை உயர்வாக நினைக்கிறோம். நம்முடைய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பெயரான தமிழ் பெயரை வைத்தால், அதை குறைவாக நினைக்கிறோம். அவனுடைய மேற்கத்திய  கலாச்சாரமான ஆடை அணியும்  முறை, உணவு பழக்கங்கள், மொழி, போன்றவற்றை  நாம் உயர்வாக எண்ணுகிறோம். நம்முடைய கலாச்சார பழக்க வழக்கங்களை நாம் தாழ்வாக நினைக்கிறோம்.

               வெள்ளைக்காரன் நம்மை விட்டு போன பின்னும் நம்மை பல விதங்களில் அடிமைபடுதிக்கொண்டே இருக்கிறான். இதை நாம் தெரிந்தும், தெரியாமலும் பெருமையாகவே நினைதுக்கொண்டிருக்கிறோம். மேற்கத்திய கலாச்சாரத்தில் சிறப்பானவைகளும் உண்டு. ஆனால் நம்முடைய கலாச்சாரத்தை குறைவாக எண்ணுவது நமக்கு இழிவு. இந்த வகையில் எனக்கும் பெயர் சூட்டிவிட்டார்கள்.   


           கிறிஸ்து யார்?  என்று யோசிக்கும் போது, உலகத்தில் மனிதனாய் பிறந்த சிலர் தன்னை கடவுள் என்று கூறிகொள்ளும் நபர்களுள் அவரும் ஒருவராக இருக்கலாம். தமிழ் நாட்டில் உள்ள சில பிரபலமான சாமியார்களை எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் தன்னை கடவுளின் மறு பிறப்பு என்றும் அம்மனின் மறு பிறப்பு என்றும் சொல்கிறார்கள். இவர்களை பின்பற்ற லச்சக்கணக்கான கூட்டம்.  500  வருடங்கள்  கழித்து இந்த லட்சகணக்கான கூட்டம் பெருகி அந்த பிரபல சாமியார்களை கடவுள் என்று அசைக்க முடியாத தனித் திரளாக மாறிவிடும் சூழல் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களை கடவுளாக ஏற்றுக்கொண்டதற்கு, அவர்கள் சொல்லும் சான்றுகள் என்னவாக இருக்குமென்றால், இவர் மக்களுகாக எராளமான நன்மைகளை செய்திருக்கிறார். பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். மக்கள் பயன் பெரும் நோக்கில் எராளமான கல்வி நிறுவனங்களை  நிறுவி இருக்கிறார், மக்களுக்கு வேலை கொடுக்கும் வகையில் பல தொழில்களை செய்துள்ளார், பல தொழில் நிறுவனங்களை நிறுவியுள்ளார் என்றெல்லாம் சொல்லுவர்கள். அப்போது உள்ள அரசியல் படி அந்த லட்சகணக்கான மக்களின் ஆதரவு வேண்டுமென்று  அவர்தான் கடவுள் என்று அரசியல்வாதிகளும்  பறைசாற்ற ஆரம்பித்து விடுவாரகள்.

                இங்கு புதிதாக ஒரு மதம் உருவாகி விட்டது. புதிதாக ஒரு கடவுள் உருவாகி விட்டார். இந்த மக்கள் பிற சமூகத்தினரை அடிமைபடுத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் அவரகளுடைய மதம் பெரிதாக தோன்றும். இப்படி வந்தவராக கூட இருக்கலாம் கிறிஸ்து.  இதில் மாட்டிகொண்டு சில வருடங்கள் கிறித்துவ முத்திரையுடன் அலைந்தவர்களில் நானும் ஒருவன். இதேபோல் ஆரியர்கள் மூலம் பரவிய  இந்து மதத்தினால் நான் ஒரு இந்துவாகவும் வாழ்ந்துவிட்டேன். வெள்ளைக்காரர்கள் மூலம் பரவிய கிறித்துவ மதத்தினால் நான் ஒரு கிறிஸ்துவாகவும் வாழ்ந்துவிட்டேன். மதம் என்னை அடையாளப்படுத்தும் சாயமகவே தெரிகிறது. 



                                      நவம்பர் 9, 2002